நாடாளுமன்ற ஜனநாயகத்தாலேயே பொருளாதார லட்சியத்தை எய்திட 
முடியாது என்று கூறியிருக்கிறார். சாதி அழித்தொழிப்பு என்ற புத்தகத்தில் 
அம்பேத்கர், சாதிய உணர்வு முறை அனைத்துப் பொருளாதார வளர்ச்சிக்கும் 
குந்தகம் விளைவிக்கிறது என்று கூறியுள்ளார். வேளாண்மைக்கும், இதர நடவடிக்கைகளுக் கும் கூட்டாகச் செயல்படுவதற்கு இது தீங்கு விளைவிக்கும் 
சூழ்நிலை களை உருவாக்குகிறது, சாதிய உறவு கள் வலுவாக இருக்கும் 
காரணத்தால் கிராமப்புற வளர்ச்சி சோசலிசத் தத்துவத்திற்கு எதிரானதாக 
இருக்கும் என்றார்.

எனவே சாதியத்தின் அடிப்படையில் அமைந்துள்ள பெரிய அளவிலான 
நிலப்பிரபுத்துவ எஸ்டேட்டுகள் தகர்க்கப்பட வேண்டும், உழுப வனுக்கே 
நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும், நகரங்கள் மற்றும் கிராமங்கள் 
இரண்டுமே வேகமாக முன்னேற்றம் அடைவதற்கு ஏற்ற வகையில், 
அப்போதுதான் அவர் களால் ஒன்றிணைந்து கூட்டாகப் பயிர் செய்திட 
முடியும் என்று அம் பேத்கர் கூறினார். காங்கிரஸ் குறித்தும், காந்தியம் 
குறித்துமே அம்பேத்கர் சரியான நிலை எடுத்துள்ளார். காங்கிரசும், 
காந்தியும் என்கிற தன்னுடைய நூலில் அம்பேத்கர், ‘‘காந்தியம் வசதி 
படைத்தவர்கள் மற்றும் சொகுசு வர்க்கத்தாரின் சித்தாந்தமாகும். 
அது வாழ்வின் அவலநிலையைக் கூட மிகச் சிறந்த நல்லதிர்ஷ்டங்களாகக் 
கருதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்குத் தவறாக 
வழிகாட்டுகிறது. காந்தியம் தெருக் கூட்டும் முறையைக் கூடச் சமூகத்தின் 
உன்னதமான பணி என்று கூறி அதனை மிகவும் பேணிப் பாதுகாக்க 
வேண்டும் என்று கூறுகிறது’’ என்று குறிப்பிட்டிருக் கிறார்.

 தரிசு நிலங்களை விவசாயத்திற்காகக் கையகப்படுத்தி அவற்றை நிலமற்ற 
விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுப்பதன் மூலம் விவசாயத் 
தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் 
கூறினார். அனைவருக்கும் கொடுப்பதற்கு நிலம் எங்கே இருக்கிறது என்று கேட்பவர்களுக்கும் அம்பேத்கர் பதில் சொல்கிறார். ‘‘நான் சோவியத் அமைப்பு 
முறையை சிறந்ததெனத் தேர்ந்தெடுக்கிறேன். நம்முடைய அவலநிலையை அகற்றுவதற்கு ஒரே வழி கூட்டுப் பண்ணை விவசாயம்தான், என் கருத்துப்படி 
சோவியத் நாட்டில் உள்ள விவசாய முறை சிறந்தது,’’ என்கிறார்.

அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருக்கும் தலித்துகள் 
வாழ்வின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கர், இந்திய அரசியலமைப்புச் 
சட்டத்தை உருவாக்குவதிலும் பங்கேற்று அந்தச் சட்டத்திலே மனிதனுக்கு 
மனிதன் சமம் என்ற வகையில் சாதியால், மதத்தால் ஒடுக்கப்பட்டவர்கள், 
சட்டரீதியாக நிவாரணம் கிடைக்கப் போராடலாம் என்று பதிவு செய்தது 
என்பது சாதாரண விஷயம் அல்ல. இதையெல்லாம் பாராட்டுகிற அதே 
நேரத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பகுதி இன்றும் 
ஏட்டளவிலேதான் இருக்கிறதே யொழிய, நாட்டில் பெருமளவில் 
நடைமுறையில் இல்லை என்பதும் மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய 
விஷயமாகும்.இந்து மதம், எங்கள் மதம் என்று, இந்தியர்கள் என்று வேதாந்தம் 
பேசும்  வகையறாக்கள், சாதியக் கொடுமைகளுக்கு ஆளாகித் தவிக்கும் 
தலித்துகளை இந்துக்கள் என்று கணக்கில் கொள்வதில்லை. நாட்டின் மொத்த 
மக்கள் தொகையில் 20 விழுக்காடு அளவிற்கு உள்ள தலித்துகளில் 
பெரும்பகுதியினர் இந்துக்கள்தான் என்பதைக் கணக்கில் கொள்ளும்போது, 
இந்து மதவெறியர்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக மட்டுமல்ல, 
இந்து மதத்திலேயே ஐந்தில் ஒரு பகுதியினராக இருக்கக்கூடிய 
தலித்துகளுக்கும் எதிரானவர்கள் என்பது வெள்ளிடை மலை.

அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில்,  நூற்றாண்டு 
காலமாக சாதியத்திற்கு எதிராக, சதுர்வர்ணத்திற்கு எதிராக, அம்பேத்கர், 
ஜோதி பாபுலே, நாராயணகுரு, தந்தை பெரியார் போன்றவர்கள் 
மேற்கொண்ட இயக்கங்களை எல்லாம் புறந்தள்ளக்கூடிய விதத்தில்  
மதவெறி, சாதி வெறிப் பிரச்சாரங்களை முறியடிக்கக்கூடிய விதத்தில் 
அம்பேத்கரின் பிறந்த தினத்தில் அனைவரும் உறுதி ஏற்போம்.

                  (இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்ததினம்)